ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல் (ACJU) - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 16 May 2021

ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல் (ACJU)

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளதோடு, அவர்களில் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான். சலுகை வழங்கப்பட்டவர்கள் அந்நோன்பை ரமழானுக்குப் பின்னர் நோற்றுக் கொள்வதை அல்லது அதற்குப் பகரமாக பித்யாக் கொடுப்பதை மார்க்கம் கடமையாக்கியுள்ளது.
எனவே, ரமழானில் நோன்பு விடுபட்டவர்கள் பின்வரும் வழிகாட்டல்களுக்கேற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

1. தற்காலிகமான நோய், மாதவிடாய், பிரசவம், பிரயாணம் போன்ற காரணங்களுக்காக நோன்பை விட்டவர்கள் அந்நோன்பை எதிர்வரும் ரமழானுக்கு முன்னர் கழா செய்து கொள்ள வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்னர் நோன்பை நோற்றுக் கொள்வதற்கு சக்தியிருந்தும் கழா செய்யவில்லையெனில், அந்நோன்பைக் கழா செய்வதுடன், தான் உட்கொள்ளும் பிரதான உணவான அரிசியிலிருந்து 600 கிராம் பித்யாவாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு நோன்பை கழா செய்யாமல் வருடங்கள் கடந்து செல்லும் போது ஒரு வருடத்திற்கு ஒரு பித்யா என்ற வகையில் பித்யாவும் இரட்டிப்பாகும்.

2. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில், தனக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து விட்ட நோன்பை எதிர்வரும் ரமழானுக்கு முன்னர் கழா மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறே அவர்களில் தனது பிள்ளைக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக மாத்திரம் நோன்பை விட்டவர்கள் அந்நோன்பை கழா செய்வதுடன் ஒரு நோன்புக்குப்பகரமாக தான் உட்கொள்ளும் பிரதான உணவான அரிசியிலிருந்து 600 கிராம் பித்யாவாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். இவர்களும் எதிர்வரும் ரமழானுக்கு முன்னர் நோன்பை நோற்றுக் கொள்வதற்கு சக்தியிருந்தும் கழா செய்யவில்லையெனில், அந்நோன்பைக் கழா செய்வதுடன் 600 கிராம் அரிசியும் பித்யாவாகக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு நோன்பை கழா செய்யாமல் வருடங்கள் கடந்து செல்லும் போது ஒரு வருடத்திற்கு ஒரு பித்யா என்ற வகையில் பித்யாவும் இரட்டிப்பாகும்.

3. நோன்பை நோற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு நிரந்தர நோய் மற்றும் வயோதிபம் போன்ற காரணங்களுக்காக நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்புக்குப் பகரமாக தான் உட்கொள்ளும் பிரதான உணவான அரிசியிலிருந்து 600 கிராம் பித்யாவாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். (வருடங்கள் கடந்து சென்றாலும் இவர்களது பித்யா இரட்டிப்பாக மாட்டாது).

அல்லாஹு தஆலா நம் அனைவருக்கும் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தேக ஆரோக்கியத்தைத் தந்தருள்வானாக.

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here