மூன்று வாரத்தின் பின்னர் கொரோனா மரணம் அதிகரிக்கும்! - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 11 May 2021

மூன்று வாரத்தின் பின்னர் கொரோனா மரணம் அதிகரிக்கும்!

ஒரு மாதகாலத்திற்கு முன்னர் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிலிருந்தே தற்போதைய கொவிட் – 19 மரணங்கள் பதிவாகி வருகின்றன.

எனவே தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வாரங்களில் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கை மருத்துவ அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோருக்குமிடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.இதன்போது கொரோனா வைரஸ் பரவலினால் சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், அனைத்து மருத்துவமனைகளினதும் கட்டில்கள் நிரம்பியுள்ளமை, அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் ஊழியர்கள், ஒட்சிசனுக்கான தேவை அதிகரித்தல், சுகாதாரப்பிரிவிற்குத் தேவையான ஏனைய வளங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் நாம் எடுத்துரைத்தோம்.

அதுமாத்திரமன்றி தற்போது மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதன் காரணமாக, ஏனைய நோய்நிலைமைகளைக் கொண்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் தொடர்பிலும் குறிப்பிட்டதுடன் இவ்விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டினோம்.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களுக்கு சுமார் ஒரு மாதகாலத்திற்கு முன்னர் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் உயர்வாக உள்ளன.

ஏனெனில் அநேகமானோருக்குத் தொற்று ஏற்பட்டு, சுமார் இருவாரங்களின் பின்னர் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன.

பின்னர் இருவாரங்கள் வரையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே உயிரிழக்கின்றார்கள். எனவே இது குறித்தும் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இடம்பெறக்கூடிய மரணங்களினதும் தொற்றாளர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எடுத்துரைத்தோம்.

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வெகுவான அதிகரிப்பொன்று ஏற்பட்டால், அதன் விளைவாக சுகாதாரத்துறை பாரிய அழுத்தங்களுக்குள்ளாக நேரிடும்.

அதேபோன்று தற்போது நாட்டில் பரவிவரும் வைரஸ் பிரிட்டனின் கண்டறியப்பட்ட திரிபடைந்த வைரஸாகும்.

இது முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளில் ஏற்பட்டதைப்போலன்றி, மிகவேகமாகப் பரவி வருகின்றது.மேலும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவருவதிலும் தாமதம் நிலவுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கல் ஒன்றே இதற்கான நிரந்தர தீர்வாகும்.ஆனால் தடுப்பூசி ஏற்றப்பட்டாலும் அதனூடாக நோயெதிர்ப்புசக்தி வலுவடைதற்கு குறித்த காலம் தேவை.

எனவே இப்போதைய அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வாக தடுப்பூசி வழங்கல் அமையாது என்றும் நாம் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here